உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புது பேருந்து நிலையத்திற்கான பிரச்னைக்கு...முடிவு!: பொன்னேரிக்கரையில் 19 ஏக்கர் இடம் தேர்வு

புது பேருந்து நிலையத்திற்கான பிரச்னைக்கு...முடிவு!: பொன்னேரிக்கரையில் 19 ஏக்கர் இடம் தேர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, சரியான இடம் கிடைக்காமல் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. பொன்னேரிக்கரையில் அரசு நிலம் 19 ஏக்கரை, புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வேலி அமைக்கும் பணிகள் நடக்கின்றன.தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முதன்மையான மாவட்டங்களில், காஞ்சிபுரம் முக்கிய இடத்தில் உள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், அடிப்படை பிரச்னைகள் இன்னும் தீராமலேயே உள்ளன.அதில் குறிப்பிடும்படியாக, காஞ்சிபுரம் புறநகர் பேருந்து நிலையம், தற்போது வரை அமைக்க முடியாத நிலை நீடிக்கிறது. காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன், 7 ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.இங்கு, சராசரியாக ஒரு நாளைக்கு, 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையம் உள்ளேயே பேருந்து டிப்போ, கடைகளின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், இடநெருக்கடி அதிகரித்தது.மேலும், பேருந்துகள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, ரெட்டை மண்டலம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்து வசதியின்றி உள்ளது.இதனால், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, அப்போதைய முதல்வர் பழனிசாமி, 2017ல் அறிவிப்பு வெளியிட்டார்.அதைத் தொடர்ந்து, கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்த பின்னும், நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின், அண்ணா பல்கலை கழக கல்லுாரி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.ஆனால் இழப்பீடாக, 26 கோடி ரூபாய் வழங்க அரசு தயாராக இல்லாததால், அந்த முடிவும் கைவிடப்பட்டது. இதையடுத்து, தனியார் அறக்கட்டளை இடத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. நிலத்தை வழங்க விருப்பமில்லாத அறக்கட்டளை நிர்வாகம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அந்த நிலத்தையும் தற்போதைக்கு எடுக்க முடியாமல் போனது.பேருந்து நிலையம் அமைவதில் பல சிக்கல்கள் நீடித்த நிலையில், பொன்னேரிக்கரை பகுதியில், புதிதாக கட்டி வரும் பாலம் அருகே, காஞ்சிபுரம் நகருக்குள் நுழையும் இடத்தில், உள்ள அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு நிலம், 19 ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்து, பேருந்து நிலையத்திற்கான இடத்தை ஒதுக்கி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். கலெக்டரின் இந்த உத்தரவு வாயிலாக, தேசிய நெடுஞ்சாலையின் மிக முக்கியமான இடத்தில், பேருந்து நிலையம் அமைவது உறுதியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், பேருந்து நிலையம் அமையும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.தமிழக அரசு, புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்காக, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஓராண்டுக்கு மேலான நிலையில், அந்த நிதியை தற்போது பயன்படுத்த உள்ளனர். காஞ்சிபுரத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த புறநகர் பேருந்து நிலைய பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.பொன்னேரிக்கரையில் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு சொந்தமான 19 ஏக்கர் நிலத்தில், புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, பேருந்து நிலையம் அமைவது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 19 ஏக்கர் நிலத்தில், பேருந்து நிலையம் எத்தனை ஏக்கரில் அமையும் என்பது இனி தான் முடிவு செய்யப்படும். விரைவில் பணிகள் துவங்கும்.கலைச்செல்வி,கலெக்டர்,காஞ்சிபுரம்.பேருந்து நிலையம் அமையும் இடத்தில், சுற்றிலும் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு வேலி அமைத்து வருகிறோம். பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவில் துவங்கிவிடும். ஏற்கனவே, பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 19 ஏக்கரில், 10 முதல் 12 ஏக்கர் பரப்பளவில், பேருந்து நிலையம் அமையும் என நினைக்கிறேன். அதில், போக்குவரத்து கழக பணிமனை போன்றவை அமைக்க வேண்டும் என்றால், போக்குவரத்து துறையினர், மாவட்ட கலெக்டரை அணுக வேண்டும். ஒரு மாதத்திலேயே, 'டெண்டர்' விடப்பட்டு, விரைவில் பணி துவங்கப்படும்.நவேந்திரன்,கமிஷனர்,காஞ்சிபுரம் மாநகராட்சி.

இடம் தேர்வு செய்தது எப்படி?

பொன்னேரிக்கரையில், தனியார் கல்வி நிறுவனங்கள் அருகிலேயே இந்த அரசு இடம் தேர்வு செய்வதற்கு, பல ஆண்டுகளாகவே சிக்கல்கள் நீடித்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு பகுதியில் உள்ள இந்த இடத்தை, முந்தைய அரசு உயரதிகாரிகளால் கையகப்படுத்த முடியாத அளவுக்கு, தனியார் அறக்கட்டளை பல சிக்கல்களை அளித்துள்ளது. இந்த நிலத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என, பலமுறை மனுவாக கொடுத்தும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும், சட்ட ரீதியாகவும் சில சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிலத்தை, அரசின் திட்டத்திற்கே பயன்படுத்த முடியாத அளவுக்கு பல குழப்பங்கள் இருந்துள்ளது. அவற்றை, தற்போதைய அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். பல மாதங்களாகவே இதற்கான பணிகள் அமைதியாக நடந்துள்ளன. நிலத்தின் முழு உரிமையும் அரசுக்கே சொந்தம் என்பதை, பல ஆவணங்களை முன்வைத்து உறுதி செய்தனர். இறுதியாக, அரசு நிலத்தை பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்த, கலெக்டர் கலைச்செல்வி கடந்த வாரம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, வேலி அமைக்கும் பணிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி