சிறப்பு கிராம சபை கூட்டம் வேறு தேதிக்கு மாற்றம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், 23ம் தேதி, காலை 11:00 மணி அளவில் உலக தண்ணீர் தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.இதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அனைத்து வட்டாரங்களில் நேற்று ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் நடத்தப்படும் என, அச்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.நேற்று காலை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, மார்ச் -23ம் தேதி நடக்கவிருந்த சிறப்பு கிராம சபை கூட்டம், மார்ச்- 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.இதில், கலைஞர் கனவு இல்லம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் இறுதி செய்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என, ஆணையர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால், நேற்று மாலை நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க போராட்டம் கைவிடப்பட்டதாக சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.