மாவட்ட அளவில் கபடி போட்டி எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்
சென்னை: மாவட்ட அளவிலான கபடி போட்டியில், கீழ்ப்பாக்கம் - எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன் பட்டம் வென்றது. திருவொற்றியூர், பெரியார் நகர், கே- ஸ்கொயர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில், முதல்வர் கோப்பைக்கான 51வது மாவட்ட அளவிலான, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பங்கேற்கும், கபடி போட்டி, நடந்தன. இதில், 44 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பான தொடரில், கீழ்ப்பாக்கம்- எஸ்.டி.ஏ.டி., அணி, விருகம்பாக்கம், பி.ஜி.பிரதர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில், இரு அணிகளும் சம புள்ளிகள் பெற்ற நிலையில், கோல்டன் ரைடு தீர்மானிக்கப்பட்டது. டாசில், பி.ஜி., பிரதர்ஸ் அணி வெற்றிப் பெற்று, அந்த அணி வீரர் ரைட் சென்றபோது, எஸ்.டி.ஏ.டி., அணி வீரர்களிடம், பிடிபட்டார். அதன் அடிப்படையில், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த, எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலிடம் பிடித்த எஸ்.டி.ஏ.டி., அணிக்கு, 20,000 ரூபாய் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த விருகம்பாக்கம், பி.ஜி., பிரதர்ஸ் அணிக்கு 15,000 ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.