உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இட ஒதுக்கீட்டில் சேர தகுதியான மாணவ - மாணவியர் செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும்: கல்வித்துறை

இட ஒதுக்கீட்டில் சேர தகுதியான மாணவ - மாணவியர் செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும்: கல்வித்துறை

காஞ்சிபுரம்:தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர தகுதியான மாணவ - மாணவியர், ஏற்கனவே பள்ளிக்கு செலுத்திய கல்வி கட்டணம் திரும்ப வழங்கப்படும் என, கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் பிள்ளைகள், சமூக ரீதியில் பின் தங்கியவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கூறி, 2025- - 26ம் கல்வி ஆண்டுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீடு சேர்க்கை ஐந்து மாதங்கள் கழித்து இப்போது துவங்கி உள்ளது. தனியார் பள்ளிகளில் புதிதாக 25 சதவீத இட ஒதுக்கீட்டில் யாரும் சேர்க்கப்படவில்லை எனவும், ஏற்கனவே பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்கின்ற நுழைவு நிலை வகுப்பில் இருந்து மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட இருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அக்., 14ல், தேர்வு செய்த மாணவ - மாணவியரின் இறுதி பட்டியல் வெளியிட பணிகள் நடக்கின்றன. இதற்காக, கல்வி குழு ஒன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சென்று, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர தகுதியான மாணவ - மாணவியரை அடையாளம் காண உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அந்த பள்ளியில் செலுத்திய கல்வி கட்டணம் திரும்ப வழங்கப்படும் என, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெற்றோர் தங்களது பிள்ளைகளை 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்க, சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !