உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 நாட்களாக அரசு பேருந்து வராததால் பழவேரியில் மாணவ - மாணவியர் தவிப்பு

2 நாட்களாக அரசு பேருந்து வராததால் பழவேரியில் மாணவ - மாணவியர் தவிப்பு

உத்திரமேரூர்: செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட தடம் எண்: 580 பேருந்து. தினமும் காலை 9:00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு ஒரு நடையும், மாலை 4:00 மணிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு ஒரு நடையும் இயக்கப்பட்டு வருகிறது. அரும்புலியூர், பழவேரி, திருமுக்கூடல் வழியே செல்லும் இப்பேருந்தை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு செல்கின்றனர். இரண்டு நாட்களாக இப்பேருந்து வராமல் உள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரிக்கு அவ்வழியே செல்லும் மாணவ - மாணவியர் கல்குவாரி லாரிகளிலும், ஆட்டோக்களிலும் ஏறி செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவ - மாணவியர் அவதியடைந்தனர். பழவேரி கிராம மக்கள் கூறியதாவது: இரண்டு நாட்களாக தடம் எண்:580 அரசு பேருந்து வரவில்லை. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் லாரிகளில் லிப்ட் கேட்டு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது காலதாமதம் ஏற்பட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, அரசு பேருந்து தினமும் வருவதற்கு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, செங்கல்பட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் மாறன் கூறுகையில், ''இரண்டு நாட்களாக தடம் எண்:580 பேருந்துக்கு ஓட்டுநர் இல்லாததால், இயக்கப்படாமல் இருந்தது. இன்று முதல் பேருந்தை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ