மொபைல்போன் வாயிலாக பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவி பெற மானியம்
காஞ்சிபுரம், :தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மொபைல்போன் வாயிலாக இயங்கும் பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவி, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்க நேரிடுகிறது.இதை தவிர்க்கும் வகையில், பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து மொபைல்போன் வாயிலாக இயக்கவும், மோட்டாரை நிறுத்தவும் முடியும்.ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 7,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில், 40 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் மானியமாக வேளாண் பொறியியல் துறை வழங்குகிறதுஇத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், வேளாண் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.