காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலை போடும் பணியால், நகர சாலைகள் உயரமாகவும், வீடுகள் பள்ளத்திலும் சென்று உள்ளன. இதனால், மழைக்காலங்களில் வெள்ள நீர் வீடுகளில் சூழும் பரிதாப நிலை உருவாகி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 291 கி.மீ., துாரம் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகள்; 122 கி.மீ., துாரம் மாவட்ட பெரிய சாலைகள்; 682 கி.மீ., துாரம் மாவட்ட சிறிய சாலைகள்; 27 கி.மீ., துாரம் பிற வகை சாலைகள் என, மொத்தம், 1,122 கி.மீ., துார சாலைகள் உள்ளன.இதுதவிர, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சிகள், காஞ்சிபுரம் மாநகராட்சி, ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஊரகம் மற்றும் நகர்ப்புற சாலை உள்ளன. ரூ. 4 கோடி செலவு
தமிழகத்தில், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், புதிதாக சாலை அமைக்கும்போது, ஏற்கெனவே போடப்பட்டுள்ள பழைய சாலையை அப்புறப்படுத்தி விட்டு அதன் மேல் புதிதாக சாலை அமைக்கப்பட வேண்டும், என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சாலைகள் சேதமடையும்போது, அந்தந்த துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக, புதிய தார் மற்றும் கான்கிரீட் சாலைகள் போடப்படுகின்றன.சாலைகள் போடும்போது, பணி ஒப்பந்தம் எடுத்தவர், ஏற்கனவே இருக்கும் சேதமடைந்த சாலைகளை இயந்திரங்களின் மூலமாக அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய சாலை போடும் பணி செய்வதில்லை. மாறாக, ஏற்கனவே இருந்த சாலை மீது, தரமில்லாத சாலை போட்டு கணக்கு காட்டி விடுகின்றனர்.இதனால், புதிதாக போடப்பட்ட சாலையாக இருந்தாலும், வெகுவிரைவாக சேதம் ஏற்பட்டு விடுகிறது. சேதம் ஏற்பட்ட சாலையை, வேறு நிதி மூலமாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு சேத சாலைக்கு இருவிதமான நிதிகள் ஒதுக்க வேண்டி உள்ளது.உதாரணமாக, காஞ்சிபுரம்மாநகராட்சியை எடுத்துக் கொண்டால், நான்கு மண்டலங்களில், 51 வார்டுகள் உள்ளன. இதில், 1,008 தெருக்கள் உள்ளன. இதில், 40 வார்டுகளில், 4 கோடி ரூபாய் செலவில், தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளம் சூழும் அபாயம்
பெரும்பாலான தெருக்களில், ஏற்கனவே இருக்கும் சாலை மீது, புதிய சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றன.இதனால், தெரு சாலை உயரமாகவும், வீடுகள் தாழ்வாகவும் மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில், மாநகராட்சி சார்பில், புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஆனால், பழைய சாலையை அகற்றாமல், அதன் மேலேயே புதிதாக சிமென்ட் சாலை அமைப்பதால், அப்பகுதியில் உள்ள வீடுகள் அரை அடி வரை பள்ளத்தில் சென்றுள்ளது.இது, கோடைக் காலங்களில் எவ்வித பிரச்னைகளும் வராது. அதுவே, மழைக்காலத்தில் தெருக்களில், மழைநீர் வீடுகளில் புகுந்து வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. இதேபோல், காஞ்சிபுரம் அறம்வளர்த்தீஸ்வரர் கோவில் தெருவிலும், தார் சாலை மீது, தார் சாலை போட்டுள்ளனர்.இதுதவிர, ராஜகுளம்- -- கரூர் கிராமம் இடையே தரைப்பாலத்தின் மீது, சிமென்ட் சாலை மீது, மற்றொரு சிமென்ட் சாலை போட்டனர். இதுபோன்ற கண்துடைப்பு செயலால், மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, பணிகளும் தரமில்லாது போகும் சூழல் உருவாகி உள்ளன.எனவே, மாநகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை பின்பற்றாமல் சிமென்ட் சாலை அமைத்து வரும் பணியை மாவட்ட நிர்வாகம் தடுத்தி நிறுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளபடி, ஏற்கனவே போடப்பட்டுள்ள பழைய சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். சுற்றறிக்கை
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு, அதே உயரத்திற்கு புதிய சாலை போட வேண்டும் என, ஓய்வு பெற்ற அரசு தலைமை செயலர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.அதை பின்பற்றி, கிராமங்களில் தார் சாலை மற்றம் கான்கிரீட் சாலை போட்டு வருகிறோம். பிற துறையினரும், இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்.நகர்ப்புற உள்ளாட்சிகளில் கடைபிடிப்பதில்லை. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.