திருவாம்புத்தேரி ஏரி கரை உடைப்பு வீணாக வெறியேறும் தண்ணீர்
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட திருவாம்புத்தேரி பகுதியில், ஊராட்சி ஒன்றியம் கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. வண்டலுார் - வாலாஜாபாத் சாலையோரம், செரப்பனஞ்சேரி ஊராட்சியை ஒட்டி இந்த ஏரி அமைந்தள்ளது. கடந்த 2022 ம் ஆண்டு, தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, ஏரியை ஆழப்படுத்தி, ஏரிக்கரைகள் பலப்படுத்தப்பட்டன. இதையடுத்து, ஏரிக்கரையில் மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது.இந்நிலையில், சமீபத்தில் ‛பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், ஏரி முழு கொள்ளவை எட்டி, உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறும் சூழல் உள்ளது.இந்நிலையில், நேற்று காலை மர்ம நபர்கள், பொக்லைன் வாயிலாக, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையோரம் உள்ள ஏரிக்கரையை உடைத்து, தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். கடந்த ஆண்டும், ஏரி கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இது குறித்து திருவாம்புத்தேரி வி.ஏ.ஓ., கூறியதாவது:திருவாம்புத்தேரி ஏரியின் நீர்வரத்து கால்வாய், செரப்பனஞ்சேரி ஊராட்சியில் அமைந்துள்ளது. நீர்வரத்து கால்வாய் ஓரம் உள்ள குடியிருப்பு வாசிகள், நேற்று காலை கரையை உடைத்து, தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.