ராஜாஜி மார்க்கெட் டெண்டர் 3வது முறையாக ஒத்திவைப்பு வாழ்வாதரம் பாதிப்பதாக வியாபாரிகள் குமுறல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய கட்டடங்களில், போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது. இதனால், புதிய மார்க்கெட் கட்டடம் கட்டித்தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனால், புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டுமான பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 7 கோடி ரூபாய் மதிப்பில், 2022ல் துவங்கப்பட்டன. மார்க்கெட் வியாபாரிகள் தற்காலிகமாக வியாபாரம் நடத்த, ஓரிக்கையில் உள்ள இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி தந்தது. அங்கு, காய்கறி வியாபாரம் நடத்தி வருகின்றனர். அடுத்த ஒரு ஆண்டில் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆகஸ்ட் மாதம், முதல்வர் ஸ்டாலின், ராஜாஜி மார்க்கெட்டை திறந்து வைத்தார்.மார்க்கெட்டில், கான்கிரீட் தளம் கொண்ட கடைகள், தரை கடைகள், கிடங்கு என, 258 கடைகள் கட்டப்பட்டுள்ளன.மார்க்கெட் திறந்த பின், அடுத்த ஓரிரு மாதங்களில் வாடகை, டெண்டர் போன்ற பணிகள் முடிந்து, புதிய மார்க்கெட்டில் வியாபாரத்தை துவங்குவோம் என, வியாபாரிகள் பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவர் கட்டும் பணிகள், டெண்டர் போன்றவை காரணமாக இன்று வரை, புதிய மார்க்கெட்டில் வியாபாரத்தை துவங்க முடியாமல் உள்ளது.மார்க்கெட் டெண்டர் உத்தரவாத தொகை, டெபாசிட் தொகை என, பல்வேறு கட்டணங்கள் சேர்த்து கோடிக்கணக்கான ரூபாயாக மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்ததால், கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி நடந்த மார்க்கெட் டெண்டரில் யாரும், மார்க்கெட் சங்கம் உட்பட யாரும் பங்கேற்கவில்லை. இதனால், முதன்முறையாக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.உத்தரவாத தொகை, டெபாசிட் கட்டணம் போன்ற தொகையை குறைக்க வேண்டும் என, மார்க்கெட் சங்கத்தினர் கமிஷனர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.இதனால், உத்தரவாத தொகை 50 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 26ம் தேதி டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போதும், நிர்வாக காரணங்களால் மார்க்கெட் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மூன்றாவது முறையாக, 28ம் தேதி நடைபெறும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இம்முறையாவது டெண்டர் நடக்கும் எனக்கும் என, நேற்று முன்தினம் வியாபாரிகள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.ஆனால், நிர்வாக காரணங்களால் டிச.,5ம் தேதி டெண்டர் நடைபெறும் என, மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மார்க்கெட் திறந்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், இன்று வரை டெண்டர் பணிகள் கூட முடியாததால், எப்போது வியாபாரத்தை துவக்குவோம் என, புலம்பி வருகின்றனர்.ஓரிக்கையில் உள்ள தற்காலிக மார்க்கெட் சகதியாக மாறி உள்ளது; வியாபாரிகள் மன உளைச்சலில் இருப்பதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு வியாபாரிகள் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என, கமிஷனரிடம், ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.புதிய மார்க்கெட்டுக்கான டெண்டர் பணிகள் விரைவாக முடித்து, வியாபாரிகள் கடை நடத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிக மார்க்கெட் மோசமான நிலையில் உள்ளது. வியாபாரம் செய்வதில் பல சிக்கல் ஏற்படுகிறது. வியாபாரமும் பாதிக்கிறது. புதிய மார்க்கெட் விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.வெங்கடேசன்,துணை தலைவர்,ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம்.
டெண்டர் விடுவதில் அரசியல் அழுத்தமா?
மார்க்கெட் டெண்டர் மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டதால், வியாபாரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு செய்வதில், அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இருப்பதாலேயே, டெண்டர் விடுவதில் தொடர்ந்து இழுபறி நடப்பதாக வியாபாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.டெண்டர் விவகாரத்தில் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தம் இருக்கும் என்கின்றனர். மார்க்கெட் திறந்து நான்கு மாதங்கள் மேலான நிலையில், தற்போது வரை பயன்பாட்டுக்கு வராதது, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்க செய்வதாக தெரிவிக்கின்றனர்.