எழிச்சூர் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு
ஸ்ரீபெரும்புதுார்: எழிச்சூர் செல்லும் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் நிறுத்தும் வாகனங்களால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகையில் இருந்து பிரிந்து, பனையூர், எழிச்சூர் வழியாக பாலுார் செல்லும் சாலை உள்ளது. வண்டலுார் -- வாலாஜாபாத், வாலாஜாபாத் -- பாலுார் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது. ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஏராளமான கனரக, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகிறது. இந்த சாலையில், பண்ருட்டி கண்டிகை சந்திப்பு அருகே, செயல்பட்டு வரும் வாகன பாழுதுபார்ப்பு நிலையத்திற்கு வரும் வாகனங்கள், சாலையின் இருபுறமும் நிறுத்தப்படு வருகிறது. இதனால், போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் இறுபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.