உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தண்டவாளத்தில் விழுந்த திடீர் பள்ளம்; திருவள்ளூர் தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் விழுந்த திடீர் பள்ளம்; திருவள்ளூர் தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

சென்னை, : அண்ணணுார் - திருமுல்லைவாயில் ரயில் நிலையங்கள் இடையே, நேற்று முன்தினம் இரவு பராமரிப்பு பணி நடந்தது.இதையடுத்து, சென்னை -- திருவள்ளூர் வழித்தடத்தில், வழக்கம்போல் நேற்று அதிகாலை, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.இந்நிலையில், பராமரிப்பு பணி நடந்த இடத்தில், தண்டவாள பாதையை பரிசோதிக்கும் பணியில், ரயில்வே ஊழியர் நேற்று காலை ஈடுபட்டார்.அப்போது, அண்ணனுார் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை ஒட்டி பள்ளம் விழுந்துள்ளதையும், தண்டவாளம் சற்று இறங்கியிருப்பதையும் அவர் கண்டார்.இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து, சீரமைப்பு பணியை நேற்று காலை 8:20 மணிக்கு துவங்கினர்.இதையடுத்து, சென்னை சென்ட்ரல் --- திருவள்ளூர் தடத்தில் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள்,விரைவு பாதையில் திருப்பி விடப்பட்டன.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர், விரைவு ரயில்களை பிடிக்க செல்வோர், ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களில் இருந்து இறங்கி, பேருந்துகளை பிடிக்க, அருகே இருந்த நிறுத்தத்திற்கு சென்றனர்.குறிப்பாக, புறநகரில் இருந்து சென்னைக்கு பணிக்கு வருவதற்காக, திருவள்ளூர், வேப்பம்பட்டு, பட்டாபிராம், ஆவடி உட்பட பல நிலையங்களில் காத்திருந்த பயணியர், குறிப்பிட்ட நேரத்தில் மின்சார ரயில்கள் வராததால், 1 மணி நேரத்திற்கும் மேல் கால்கடுக்க நின்று அவதியடைந்தனர்.தண்டவாளம் பழுது, ரயில் தாமதம் குறித்து, ரயில் நிலையங்களில், முறையாக அறிவிப்பு செய்யப்படாததால், பயணியர் மத்தியில் நீண்ட நேரம் குழப்பம் ஏற்பட்டது.இதற்கிடையே, அண்ணனுாரில் தண்டவாளம் இறங்கிய இடத்தில் சீரமைப்பு பணி முடிந்தது. இந்த தடங்கலால், இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:மெட்ரோ குடிநீர் குழாய் பதிக்கும் பணி காரணமாக, ஆவடி ----- அம்பத்துார் இடையே 20 கி.மீ., வேகத்திலே மின்சார ரயில் இயக்கப்படுகிறது.இந்த குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக, நீர் கசிவு ஏற்பட்டு, அண்ணனுார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தேங்கியது தெரிந்தது.இதனால், பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிக்கு பின், மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை