வெளியூரில் மனை பட்டா பெற பழங்குடியினர் மக்கள் மறுப்பு
சீட்டணஞ்சேரி:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், 20 இருளர் குடும்பத்தினர் அப்பகுதி சாலை ஓர புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு மனை பட்டா மற்றும் அரசின் தொகுப்பு வீடு வழங்க இம்மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, இப்பகுதி பழங்குடியினர் மக்களுக்கு சாத்தணஞ்சேரி கிராமத்தில் மனை பட்டா வழங்கி உள்ளதாகவும், சீட்டணஞ்சேரியில் இருந்து அப்பகுதிக்கு வசிப்பிடத்தை மாற்றி கொள்ளுமாறும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் அவர்களிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், வெளியூர் சென்று மாற்று இடத்தில் வசிக்க தங்களுக்கு விரும்பம் இல்லை என, சீட்டணஞ்சேரி கிராம பழங்குடி மக்கள் சாத்தணஞ்சேரி செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து, சீட்டணஞ்சேரி பழங்குடியினர் மக்கள் கூறியதாவது:கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டணஞ்சேரியை பூர்வீகமாக கொண்டு வசித்து வருகிறோம். திடீரென மனை பட்டா வழங்குவதாகவும், இடம் பெயர்ந்து வாழவும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சீட்ணஞ்சேரியில் சொந்த தொழில் மூலம் வருமானம் ஈட்டுதல் உள்ளிட்ட பிழைப்புக்கு பல வழி உள்ளது. குழந்தைகளும் இங்குள்ள பள்ளிகளில் நல்ல முறையில் கல்வி பயில்கின்றனர். மாற்று இடத்திற்கு வாழ சென்றால் கண்டிப்பாக அத்தகைய வசதிகள் கிடைக்காது.எனவே, எங்களுக்கு இதே பகுதியில் மனைபட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.