| ADDED : நவ 16, 2025 02:11 AM
உத்திரமேரூர்: -பினாயூர் ஏரியில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களை அகற்ற, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில் 150 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான, இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீரை கொண்டு, அப்பகுதியில் உள்ள 250 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமல், நீர்ப்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்து இருந்தது. இதனால், ஏரியில் குறைவான அளவே, த ண்ணீர் சேகரமாகி வந்தது. இதை தவிர்க்க விவசாயிகள் ஏரியை துார்வார கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், ஏரியை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், 6.90 லட்சம் செலவில், ஆறு மாதத்திற்கு முன் துார்வாரப்பட்டது. அப்போது, நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து அள்ளப்பட்ட மண், அதே ஏரியில் குவியல்களாக ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. இதனால், மழை நேரங்களில் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் மூலமாக, தண்ணீர் வந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் சேகரமாவதில், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பினாயூர் ஏரியில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களை அகற்ற, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பினாயூர் ஏரியை துார்வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை கொண்டு கரை பலப்படுத்தப்பட்டது. மீதமுள்ள மண்ணை ஏரியிலே குவியல்களாக கொட்டப்பட்டுள்ளன. விரைவில் மண் குவியல்களை ஏரியிலிருந்து அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.