கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் கோரைப்புல் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காதாதால், முத்தாலம்மன் கோவில் குளக்கரை வழியாக செல்லும் கால்வாயின் நீர்வழித்தடத்தில், கோரைப்புல் வளர்ந்து, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், கோரைப்புல் வளர்ந்துள்ள மழைநீர் நீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.