பாசி படர்ந்து புற்கள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ஓரிக்கை:பாசி படர்ந்து கோரைப்புற்கள் வளர்ந்துள்ள உதயமாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, சதாவரம் செல்லும் சாலையோரம் உதயமாங்குளம் உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்து நீரை அப்பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கு குடிநீராக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் கோரைப்புற்கள் வளர்ந்து உள்ளன. மேலும், குளத்து நீர் பாசி படர்ந்து, மாசடைந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உதயமாங்குளத்தை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.