உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இ - சேவை மைய கட்டடங்கள் வீண் சேவை பெறுவதில் பயனாளர்கள் அவதி

இ - சேவை மைய கட்டடங்கள் வீண் சேவை பெறுவதில் பயனாளர்கள் அவதி

வாலாஜாபாத்:கிராம ஊராட்சிகளில் உள்ள 'இ - சேவை' மையங்கள் முறையாக செயல்படுத்தாததால், பல்வேறு சான்றுகளை உடனுக்குடன் பெற முடியாமல், நகர் பகுதிகளுக்கு அலைய வேண்டியுள்ளது குறித்து, கிராம வாசிகள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா, சிட்டா உள்ளிட்டவை பெறுவதற்கு, கடந்த ஆண்டுகளில் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டன.இந்த சேவைகளை கிராம அளவில் கொண்டு செல்ல அரசு தீர்மானித்தது. இதன் தொடர்ச்சியாக, 2013 - 14ம் ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகள் தோறும், தலா 14 லட்சம் ரூபாய் செலவில், இதற்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும், இ - சேவை மைய கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டன.சான்றுகள் மட்டுமின்றி, ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தொடர்பான அனைத்து பணிகளையும், கிராம வாசிகள் இந்த மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.இதனால், கிராம மக்கள் பலரும் அலைச்சல் இல்லாமல் சான்றுகள் பெறலாம் என மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில், இக்கட்டடம் செயல்பாடு இல்லாமல், தற்போது வரை மூடியே வைக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செயல்படும் சில கட்டடங்களும், தற்காலிக ஊராட்சி அலுவலகமாகவும், அங்கன்வாடி மையமாகவும், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அவ்வப்போது கூட்டம் நடத்தக்கூடிய கட்டடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், ஆன்லைன் விண்ணப்பங்களுக்காக, வட்ட அளவிலான பொது சேவை மையங்களுக்கும், தனியார் இ - சேவை மையங்களுக்கும் அலைய வேண்டிய நிலை தொடர்கிறது.எனவே, ஊராட்சிகளில் உள்ள சேவை மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, சான்றுகள் உடனுக்குடன் கிடைக்கவும், மக்களின் அலைச்சலை குறைக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கூறியதாவது:'இ - சேவை' மையங்கள் ஏற்படுத்தப்பட்ட துவக்கத்தில், சான்றுகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தல், நுாறு நாள் திட்ட பணியாளர்களுக்கு புதிய அட்டைகள் வழங்குதல், கணக்குகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறிப்பிட்ட சில மைங்களில் மேற்கொள்ளப்பட்டன.மகளிர் குழுக்களுக்கு உரிய பயிற்சி அளித்து, அவர்கள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழு திட்ட செயல்பாடுகளில் மாற்றம், கிராமங்களில் இணையதள சேவை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை முழுமையாக செயல்படுத்துதல் குறித்தான மக்களின் கோரிக்கையை, அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி