உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லப்பாக்கம் சிப்காட் நில எடுப்பு ரத்து சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு: கலெக்டருக்கு திருப்பி விட்ட தொழில் துறை

வல்லப்பாக்கம் சிப்காட் நில எடுப்பு ரத்து சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு: கலெக்டருக்கு திருப்பி விட்ட தொழில் துறை

காஞ்சிபுரம்:வல்லப்பாக்கம் சிப்காட் அமைக்கும் நடவடிக்கைகள் கைவிடப்படும் நிலையில், அதற்கான நில எடுப்பு ரத்து சான்றிதழ் வழங்காமல், நில உரிமையாளர்களின் மனுக்களை, கலெக்டருக்கு திருப்பி விடுவது ஏற்புடையது இல்லை என, நில உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவில், புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க கடந்த 2021ல், சிப்காட் அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளுடன் பேச்சு மேற்கொள்ளப்பட்டு, நில எடுப்புக்கான அதிகாரிகள் நியமனம் செய்வது என, பல்வேறு பணிகளை சிப்காட் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. மேலும், நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்களின் நிலங்களுக்கான இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், அவர்களின் நிலங்களை விற்கவும், அடமானம் வைக்கவும் தடை விதிக்கப்பட்டு, பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வல்லப்பாக்கம் கிராமத்தில் சிப்காட் அமைக்க முடிவு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பதாக, நில உரிமையாளர்கள், மாவட்ட கலெக்டரிடமும், சிப்காட் அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் முறையிட்டு வந்தனர். இந்நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து, சிப்காட் நிர்வாக குழு கூட்டத்தில், வல்லப்பாக்கத்தில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட முடிவு செய்திருப்பதாக, நில உரிமையாளர்களுக்கு, சிப்காட் நில எடுப்பு அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர். சிப்காட் அமைக்கும் முடிவை கைவிடும் நிலையில், அதற்கான அரசாணையை பிறப்பிக்காமல், இழுத்தடிப்பதாக நில உரிமையாளர்கள் புலம்புகின்றனர். சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட முடிவு எடுத்த தொழில் துறை, நில உரிமையாளர்கள் நிலங்களுக்கு என்.ஓ.சி., வழங்காமலும், சரியான பதில் தெரிவிக்காமல் இருப்பதாகவும் நில உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். வல்லப்பாக்கத்தில் சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கைகளை கைவிட முடிவு செய்த அதிகாரிகள், அதற்கான நில எடுப்பு ரத்து சான்றிதழை நில உரிமையாளர்கள் கேட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் வல்லப்பாக்கத்தை சேர்ந்த செல்வம் என்பவர், நில எடுப்பு ரத்து சான்றிதழ் கேட்டு, தொழில் துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க, அரசு துணை செயலர் விஜயராஜன், மாவட்ட கலெக்டருக்கு மனுவை மாற்றி அனுப்பி உள்ளார். இதனால், நில உரிமையாளர் செல்வம் அதிர்ச்சி யடைந்தார். நில எடுப்பு ரத்து சா ன்றிதழ் வழங்குவது உள்ளிட்ட முடிவுகளை தொழில் துறையின் உயரதிகாரிகள் எடுக்க வேண்டிய நிலையில், தன் மனுவை, கலெக்டருக்கு மாற்றி அனுப்பியது கண்துடைப்பு நடவடிக்கை என, செல்வம் புகார் தெரிவித்துள்ளார். சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு தான் பிறப்பிக்க வேண்டும் எனவும், நில உரிமையாளர்களின் மனுக்களை, கலெக்டருக்கு திருப்பி விடுவது ஏற்புடையது இல்லை என, நில உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ