| ADDED : ஜன 03, 2024 10:00 PM
காஞ்சிபுரம்:தேர்தலுக்கு முன், காலியாக இருக்கும் கால்நடை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகம் முழுதும், காலியாக இருக்கும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை, உடனடியாக நியமிக்க வேண்டும் என, தமிழ்நாடு கால்நடை உதவியாளர் சங்கத்தினர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குனருக்கு, கடந்த டிசம்பர் மாதம் மனு அளித்தனர்.இந்த மனுவிற்கு, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குனர் சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.மனு விபரம்:திருப்பூர், வேலுார், திருவாரூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.மீதம் இருக்கும் பிற மாவட்டங்களில் நியமிக்கப்படாததால், காலியாக இருக்கும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும்.அந்தந்த மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர்களே, முறையாக அந்தந்த கலெக்டரிடம் அனுமதி பெற்று, இன சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க மாநில தலைவர் ஜெயமணி கூறியதாவது:கால்நடை துறையில் காலியாக இருக்கும் உதவியாளர் பணியிடங்களை, லோக்சபா தேர்தலுக்கு முன் கால தாமதம் இன்றி உடனடியாக நிரப்ப வேண்டும். தேர்தல் அறிவித்துவிட்டால், பணி நியமனம் செய்ய முடியாத சூழல் உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.