உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகவதி ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் குடிநீர் பாதிப்பு வில்லிவலம் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தல்

வேகவதி ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் குடிநீர் பாதிப்பு வில்லிவலம் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத், வேகவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து குடிநீர் மற்றும் மண்வளம் பாதுகாக்க, வில்லிவலம், தாங்கி உள்ளிட்ட கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம், பெண்டை, புதுப்பேட்டை, நாய்க்கன்பேட்டை, திம்மையன்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வேகவதி ஆற்றங்கரையொட்டி உள்ளன. இந்த கிராமங்களுக்கான குடிநீர் தேவைக்கு வில்லிவலம் சுற்றுவட்டார வேகவதி ஆற்று படுகையில் திறந்தவெளி மற்றும் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்து அதன் வாயிலாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் ஏரி அருகே துவங்கும் வேகவதி ஆறு, முசரவாக்கம், கீழ்கதிர்ப்பூர், காஞ்சிபுரம் நகர் மற்றும் தேனம்பாக்கம் வழியாக வாலாஜாபாத் ஒன்றியத்தில் வில்லிவலம் வந்தடைகிறது. இதில், காஞ்சிபுரம் நகரில் பல இடங்களில் இயங்கும் சாயப்பட்டறை கழிவுநீர் வேகவதி ஆற்றில் விடப்படுகிறது. இதேபோன்று, உணவகங்கள், திருமண மண்டபங்கள், விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் வேகவதி ஆற்றில் விடப்படுகிறது. அய்யம்பேட்டை, கருக்குப்பேட்டை, ஏகனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடை மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வேகவதி ஆற்றில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வில்லிவலம் வேகவதி ஆற்று படுகையில் கடந்த ஆண்டுகளில் மணல் அள்ளியதால் ஆங்காங்கே தாக்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பள்ளங்களில், வேகவதி ஆற்றில் வரும் மாசடைந்த சாக்கடை நீர் தேக்கமாகி குளம் போல் உள்ளது. இதனால், அப்பகுதிகளில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதுடன் வேகவதி ஆற்றில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர், தரமற்று சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வேகவதி ஆற்று தண்ணீர் அருகாமையில் உள்ள சீயமங்கலம் பாலாற்றில் கலப்பதால் பாலாற்று தண்ணீரும் மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். சீயமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது, காஞ்சிபுரத்தில் இருந்து, அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை வழியாக வேகவதி ஆற்றில் வரும் தண்ணீர் சீயமங்கலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. சீயமங்கலம் மற்றும் திம்மராஜம்பேட்டை, தாங்கி, பூசிவாக்கம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாலாற்று தண்ணீர் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. முந்தைய காலங்களில் பாலாற்று குடிநீர் தரம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால், வேகவதி ஆற்று வழியாக வரும் கழிவுகள் கலந்த தண்ணீரால் தற்போது பாலாற்று நீரில் முன்பு இருந்த சுவை இல்லாமல் உவர்ப்பாக உள்ளது. எனவே, பாலாற்று நீர்வளம் மற்றும் மண் வளம் பாதிக்க காரணமான வேகவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மணடல நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேகவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து, சமீபத்தில் மேல்மட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ