உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் புறவழிச்சாலை பணிகள்...சுணக்கம் !:மண் தட்டுப்பாடால் ஓராண்டு நீட்டிப்பு

வாலாஜாபாத் புறவழிச்சாலை பணிகள்...சுணக்கம் !:மண் தட்டுப்பாடால் ஓராண்டு நீட்டிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும், வாலாஜாபாத் பைபாஸ் சாலைக்கு மண் கிடைக்காததால், பணி சுணக்கம் அடைந்துள்ளது. அதனால் ஒப்பந்ததாரர், 12 மாதங்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டு, நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அளித்துள்ளார்.காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ராஜவீதி வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு வாகனங்கள் செல்கின்றன.அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து, சதுக்கம் வழியாக வாலாஜாபாத் - வண்டலுார் சாலை வழியாக, தாம்பரத்திற்கு வாகனங்கள் செல்கின்றன.ஒரே நேரத்தில், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் எதிர் வரும் வாகனங்கள் மற்றும் டிப்பர் லாரிகளால் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், வாலாஜாபாதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.இதில், 141.59 கோடி ரூபாய் புறவழிச் சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2022ல், சாலை விரிவுபடுத்தும் பணி துவங்கியது.குறிப்பாக, செங்கல்பட்டு பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், புளியம்பாக்கம் கிராமம் அருகே துவங்கும் மேம்பாலத்தின் மீது ஏறி, ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை வழியாக வெங்குடி கிராமத்தில் இறங்கி செல்லும். அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள், வெங்குடி கிராமத்தில் துவங்கும் மேம்பாலத்தின் மீது ஏறி, கிதிரிப்பேட்டை, ஊத்துக்காடு, புளியம்பாக்கம் மேம்பாலத்தின் வழியாக, இறங்கி செல்லும்.இந்த பைபாஸ் சாலை போடும் பணி, மார்ச் மாதம் நிறைவு செய்திருக்க வேண்டும். பைபாஸ் சாலை போடும் பணி ஒப்பந்தம் எடுத்தவருக்கு, மேம்பாலங்கள் ஏறும் இடம் மற்றும் இறங்குமிடங்களில் மண்ணை கொட்டி நிரப்புவதற்கு மண் கிடைக்காததால், மேம்பாலம் போடும் பணி மற்றும் சாலை போடும் பணி ஆகிய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த புறவழிச்சாலை நிறைவு பெறாததால், வாலாஜாபாத் ராஜவீதி மற்றும் வாலாஜாபாத் சதுக்கத்தில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணியில், 6.864 கி.மீ., துாரம் வாலாஜாபாத் பைபாஸ் போடும் பணி நடந்து வருகிறது.இந்த பணியை, 2024 மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, ஒப்பந்தத்தில் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.சாலை போடும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவருக்கு, மேம்பாலத்திற்கு இடையே, மண் கொட்டி நிரப்புவதற்கு மண் கிடைக்காததால், 12 மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.அவரின் கடிதம் பரிசீலனையில் உள்ளன. கூடுதல் அவகாசம் வழங்கினாலும், குறைந்த மாதங்களில் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் அறிவுரை வழங்குவர்.இருப்பினும், முடிந்த அளவிற்கு சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை