காஞ்சிபுரம்:வாலாஜாபாத் - செய்யாறு சிப்காட் இடையே 31 கி.மீ., துாரத்தை, 16 கி.மீ., துாரமாக குறைக்கும் புறவழிச்சாலை திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும், சர்வே பணிகள் மேற்கொண்டு அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளோம் என, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். இதன் வாயிலாக, தொழில் வளர்ச்சி கைகொடுப்பதோடு, பயண நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் செலவும் குறையும்.தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கியமான இடத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது. தொழிற்பூங்கா, தொழிற்பேட்டைகள் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்குகிறது.ஆண்டுதோறும் 70,000 கோடி ரூபாய்க்கு மேலாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் புதிய சாலைகள் அவசியமாகிறது.பொதுமக்கள், பயணியர், தொழிற்சாலை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும், வாலாஜாபாத் - செய்யாறு சிப்காட் இடையே புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதேபோல், செய்யாறு தொகுதியின் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோதி, கடந்தாண்டு நடந்த சட்ட சபை கூட்டத்தொடரிலும், இத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், இத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் கூட இன்னும் துவங்கவில்லை.நெருக்கடிதற்போதைய சூழலில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்திலிருந்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட மாங்கால் கூட்டுசாலையில் இயங்கும் செய்யாறு சிப்காட் பகுதிக்கு, சென்று வர காஞ்சிபுரம் கடந்து தான் செல்ல வேண்டும்.வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதி மக்கள் செய்யாறு, வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் சென்று, இரண்டாவதாக ஒரு பேருந்து பிடித்து செல்ல வேண்டும்.அதேபோல, செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஒரகடம், படப்பை, வாலாஜாபாத் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, கம்பெனி பேருந்து செல்ல வேண்டுமானால், துாசி, காஞ்சிபுரம் வழியாக வாலாஜாபாத் செல்ல வேண்டும்.இதனால், செவிலிமேடு, ஓரிக்கை, பெரியார் நகர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. செங்கல்பட்டு சாலையில் செல்வோருக்கும் இது நெருக்கடியை ஏற்படுத்துகிறது.வாலாஜாபாத் - காஞ்சிபுரம் இடையே 15 கி.மீ., துாரமும், காஞ்சிபுரம் - செய்யாறு சிப்காட் இடையே 16 கி.மீ., துாரம் என, 31 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியுள்ளது.எதிர்பார்ப்புஆனால், வாலாஜாபாத்திலிருந்து அவலுார், ஆற்ப்பாக்கம் வழியாக புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், 16 கி.மீ., துாரமாக இதன் தொலைவு குறையும்.இதன் காரணமாக, பயண நேரத்தையும், போக்குவரத்து செலவையும், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் வகையில், வாலாஜாபாத் - செய்யாறு சிப்காட் இடையே புதிய புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக நெடுஞ்சாலைத் துறை கொண்டு வர வேண்டும் என பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.புறவழிச்சாலை அமைந்தால் செய்யாறு, ஆரணி போன்ற மக்கள் அதிகம் பலனடைவார்கள். அரசு பேருந்தாக இருந்தாலும், கம்பெனி பேருந்தாக இருந்தாலும் காஞ்சிபுரம் சென்று தான் வாலாஜாபாத் செல்ல முடிகிறது. பயண நேரம் அதிகமாவதால், பயணியருக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. ஆற்ப்பாக்கம் வழியாக புதிய சாலை அமைந்தால் எங்களுக்கு மட்டுமல்லாமல், வாலாஜாபாத் மக்களுக்கும் பயன் கிடைக்கும்.-- ஜி.வெங்கடேஷ்வரன், செய்யாறு.வாலாஜாபாத்தில் இருந்து செய்யாறு வந்தவாசி, திருவண்ணாமலை செல்வோர், 20 கி.மீ., துாரத்திற்கு மேல் சுற்றிச் செல்வது குறையும். எரிபொருள் செலவு மிச்சமும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிமையாக செல்ல முடியும். உத்திரமேரூர் செல்வோருக்கும் எளிமையாக இருக்கும். இதனால், விபத்துகள் தடுக்கப்படும் புறவழிச் சாலை பணியை விரைந்து துவக்க வேண்டும். - ஜி.சீனிவாசன், விவசாயி, அவளூர்.வாலாஜாபாத் - செய்யாறு சிப்காட் இடையே புதிய சாலை அமைக்க, ஏற்கனவே சட்டசபையில் கேட்டுள்ளேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடமும், தொழில் துறை அமைச்சரிடமும் கேட்டுள்ளேன். நெடுஞ்சாலைத் துறையின் கிராம சாலை பிரிவுக்கு மாற்ற வேண்டும். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய இரு கலெக்டர் அலுவலகங்களும், இந்த சாலைகளை, நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்க வேண்டும். - ஓ.ஜோதி, தி.மு.க., -- எம்.எல்.ஏ., செய்யாறு சட்டசபை தொகுதி.வாலாஜாபாத் - செய்யாறு சிப்காட் இடையே புறவழிச்சாலை பற்றி ஏற்கனவே எங்களிடம் பலரும் கேட்டுள்ளார்கள். இந்த திட்டம் சம்பந்தமாக ஏற்கனவே நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம். சர்வே பணிகள் செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளோம்.பொறியாளர் ஒருவர், நெடுஞ்சாலைத் துறை, காஞ்சிபுரம்.
புறவழிச்சாலை அமைவதால் பலன்கள்
1 வாலாஜாபாத் -- காஞ்சிபுரம் -- செய்யாறு சிப்காட் வழியாக கார், பேருந்து போன்றவை செல்ல, ஒரு மணி நேரம் ஆகிறது. புதிய சாலை அமைந்தால் அரை மணி நேரத்தில் செல்ல முடியும். 31 கி.மீ.,துாரம் 16 கி.மீ.,துாரமாக குறையும்.2 செய்யாறு சிப்காட் தொழிற்சாலையிலிருந்து, வாலாஜாபாத் பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள், காஞ்சிபுரம், செவிலிமேடு, ஓரிக்கை போன்ற இடங்களில் நெரிசலில் சிக்குகிறது. அதுபோன்ற நெரிசல் தவிர்க்கப்படும்.3 வாலாஜாபாத் சுற்றியுள்ள கிராம மக்கள் காஞ்சிபுரம் செல்லாமலேயே, வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு, ஒரே பேருந்தில் செல்ல முடியும். இரண்டு பேருந்து பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.4 கிளாம்பாக்கத்திலிருந்து, வாலாஜாபாத், செய்யாறு சிப்காட் வழியாக திருவண்ணாமலைக்கு நேரடியாக பேருந்து சேவை கிடைக்கும்.5 ஒரகடம், வாலாஜாபாத், செய்யாறு ஆகிய தொழிற்சாலை பகுதிகள், 40 கி.மீ.,துாரம் ஒரே நேர்க்கோட்டில் அமையும். மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடையும்.