மத்திய நிதிக்குழு ரூ.52 கோடி ஒதுக்கியது கிடைத்த பணத்தை என்ன செய்வது? திட்டப்பணிகளை துவக்காமல் அலட்சியம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு 52 கோடி ரூபாயை மத்திய நிதிக்குழு மானியமாக ஒதுக்கியும், இந்தாண்டுக்கான பணிகளை தேர்வு செய்யாமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊரக உள்ளாட்சி பகுதிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக இவை மாவட்டம், ஒன்றியம், ஊராட்சிகள் என பிரிக்கப்பட்டு உள்ளன. ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒருமுறை, மத்திய நிதிக்குழு மானியம் வழங்கி வருகிறது. இந்த நிதியை இரு தவணைகளாக பிரித்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கும். ஒதுக்கப்படும் நிதியில், 30 சதவீதம் துாய்மை மற்றும் சுகாதார பணிகள்; 30 சதவீதம் குடிநீர் வளர்ச்சி திட்டங்கள்; 40 சதவீதம் அரசு கட்டடங்களை புதுப்பிக்கும் பணிகள் செய்ய வேண்டும். அந்த வகையில், கடந்த ஆண்டு, மத்திய நிதிக்குழு மானியமாக 47.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 246 பணிகள் தேர்வு செய்யப்பட்டன. மாவட்டம் முழுதும் இப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன. எதிர்பார்ப்பு இப்பணிகளில், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தேர்வு செய்த பணிகளே அதிகம் எனவும், உள்ளாட்சி நிர்வாகங்கள் தேர்வு செய்தது குறைவு எனவும், கடந்தாண்டு புகார் எழுந்தது. இதனால், கிராமப் பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பணிகள் நடக்கவில்லை. இதுகுறித்து பிரச்னை எழவே, வரும் காலங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தேர்வு செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், 15வது மத்திய நிதிக்குழு இந்தாண்டு செய்ய வேண்டிய பணிகளுக்காக, 52.95 கோடி ரூபாயை கடந்த மாதம் ஒதுக்கியது. இந்நிதியில், மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி பகுதிகளில் தேவையான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டது. நிதி ஒதுக்கி ஒரு வாரத்திற்குள் பணிகளை தேர்வு செய்ய வேண்டிய நிலையில், இரு வாரங்கள் கடந்தும், எந்த பணிகளை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்கள் பணிகளை தேர்வு செய்து கொடுக்கவில்லை என, ஊரக வளர்ச்சி துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை, மாநில அரசு அதிகாரிகள் பயன்படுத்தாமல் வீணடிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆக்கப்பூர்வமான பணிகளை தேர்வு செய்து, கிராம, ஒன்றிய பகுதிகளில் முறையாக செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனுமதி ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி நிர்வாகங்களில், நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்னரே, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக சில பணிகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக, அவசியமாக செய்ய வேண்டிய குடிநீர் திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் , ஏற்கனவே முடிந்த சாலை சீரமைப்பு பணிக்கு அதிகாரிகள் அனுமதி அளித்து, அந்த ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை விடுவிக்கின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15வது மத்திய நிதிக்குழு மானியமாக, 52.95 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. 'இந்த நிதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பட்டியல் சேகரித்து வருகிறோம். தேர்வு செய்யப்பட்ட பின், பணிகள் துவங்க அனுமதி அளிக்கப்படும்' என்றார். உள்ளாட்சி நிர்வாகங்கள் நிதி ஒதுக்கீடு ஊராட்சிகள் ரூ.43.53 கோடி ஒன்றியங்கள் ரூ.6.70 கோடி மாவட்டம் ரூ.2.72 கோடி மொத்தம் ரூ.52.95 கோடி