உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செங்கை, காஞ்சி வழியாக அரக்கோணத்திற்கு வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படுமா?

செங்கை, காஞ்சி வழியாக அரக்கோணத்திற்கு வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படுமா?

காஞ்சிபுரம்:சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலையில், 'வந்தே மெட்ரோ' ரயில் தயாரிக்கும் பணி சில மாதங்கள் முன்பாக முடிந்தது. இந்த ரயில், 150 கி.மீ., முதல் 200 கி.மீ., துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 பெட்டிகள் உடைய இந்த ரயிலில், 'ஏசி' வசதி, பயணியரை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன. கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்டவையும் உண்டு.சென்னை கடற்கரை -- வாலாஜா இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த 'வந்தே மெட்ரோ' ரயில், சென்னை -- காட்பாடி அல்லது திருப்பதி வழித்தடத்தில் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த ரயில், 150 முதல் 200 கி.மீ.,இடையயான நகரங்களுக்கு இயக்கப்படும் என கூறப்படும் நிலையில், சென்னை -கடற்கரை இடையே, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக இந்த ரயில் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக, அரக்கோணம் வரை, 130 கி.மீ., துாரம் உள்ளது. இந்த துாரத்திற்கு இடையே, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பாலுார், திருமால்பூர் போன்ற முக்கிய ஊர்கள் உள்ளன. இங்கிருந்து அன்றாடம், சென்னைக்கு வேலை நிமித்தமாகவும், வியாபாரம், சிகிச்சை, சுற்றுலா, தனிப்பட்ட பயணம் என பல வகையில் பயணியர் சென்று வருகின்றனர். ஏற்கனவே இயக்கப்படும் மின்சார ரயில்களில் கழிப்பறை இன்றி பயணியர் சிரமப்படுகின்றனர். 'வந்தே மெட்ரோ' ரயிலில், கழிப்பறை, ஏசி, கண்காணிப்பு கேமரா என, முக்கிய வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. ஏற்கனவே இயக்கப்படும் மின்சார ரயில்களில், அரக்கோணம், திருமால்பூர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் ஏறும் பயணியர், சென்னை கடற்கரை வரை சிறுநீர் கழிக்க கூட முடியாத வகையில், 4 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. மிகுந்த சிரமத்திற்கு பயணியர் ஆளாகி வருகின்றனர்.'வந்தே மெட்ரோ' ரயிலில், கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டாலும் ஏராளமான பயணியர் செல்ல தயாராக உள்ளனர். கழிப்பறை உள்ள ரயில்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக பயன்பாட்டுக்கு வர உள்ள 'வந்தே மெட்ரோ' ரயிலை, கடற்கரை முதல் அரக்கோணம் வரை காஞ்சிபுரம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ