திருக்காலிமேடு அரசு பள்ளிக்கு கட்டடம் கட்டித் தந்த யமஹா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள திருக்காலிமேடு அரசு உயர்நிலை பள்ளியில், மாணவ -- மாணவியருக்காக, 12 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டடத்தை, 'யமஹா மோட்டார்' நிறுவனம் கட்டி ஒப்படைத்துள்ளது.இந்த கட்டடத்தில் வகுப்பறைகளை தவிர, சமையல் அறை, கழிப்பறை, கணினி ஆய்வகம், மின் தேவைக்கு, 10 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கூடுதலாக மழை நீர் சேகரிப்பு வசதி, தண்ணீர் தொட்டி, பள்ளியை சுற்றி மதில் சுவர் ஆகியவையும் கட்டித் தரப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு, புத்தக பைகள், புத்தகங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.தமிழகத்தில் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், யமஹா நிறுவனம், சமூக பங்களிப்பு பிரிவின் இந்த பணிகளை செய்து வருகிறது.இதற்காக, தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல், நம்ம ஊர் பள்ளி' திட்டத்துடன் இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய சமூக பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இதற்கு முன் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கட்டடம் கட்டித் தரப்பட்டன. நான்கு ஆண்டுகளில் கட்டப்படும் நான்காவதாக, காஞ்சிபுரம் பள்ளி கட்டப்பட்டுள்ளது.