ரூ.30 லட்சம் மோசடியில் தாய், மகன் தலைமறைவு
நாகர்கோவில் : களியக்காவிளையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து, 30 லட்சம் ரூபாய் பெற்ற தாய், மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் விஜய் சேகர், 38, போலீஸ் எஸ்.பி.,யிடம் அளித்த புகாரில், 'கேரள மாநிலம், பாறசாலையைச் சேர்ந்த பிர்லா ஜெஸ்லின், 50, அவரது மகன் அணுஷ், 21, ஆகியோர் நிதி நிறுவனத்தில், 2022-ல் தங்க நகைகளை அடகு வைத்து, 55 லட்சத்து 26,137 ரூபாய் கடன் பெற்றனர். 'அவர்களது நகைகளை ஆய்வு செய்தபோது, அவை போலி நகைகள் என தெரியவந்தன. இதுகுறித்து, தாய், மகனிடம் தெரிவித்து, பணத்தை செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டது. அவர்கள், 25 லட்சத்தை திருப்பி செலுத்தினர். மீதமுள்ள தொகையை செலுத்தாமல் தலைமறைவாகினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, பிர்லா ஜெஸ்லின், அணுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.