மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
மார்த்தாண்டம்:குழித்துறை நகராட்சி சேர்மன் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகளின் மனைவி மற்றும் உறவினர்கள் களம் இறங்குகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்த வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மூன்று மாதத்திற்கு முன் நடந்த சட்டசபை தேர்தலின் போது இருந்த கூட்டணிகள் தற்பொழுது உடையும் தருவாயில் உள்ளது.அ.தி.மு.க., - காங்., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., தனித்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் குழித்துறை நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன.நகராட்சியின் மையப்பகுதி வழியாக தாமிரபரணி ஆறு பாய்கிறது. பம்மம், திரித்துவபுரம் பகுதிகள் நகராட்சி எல்லையாக உள்ளது. இந்த நகராட்சியை பொறுத்தவரையில் ஆட்சி அதிகாரம் நீண்ட காலமாக மா.கம்யூ., வசம் இருந்தது. கடந்த தேர்தலில் கவுன்சிலர்களால் தி.மு.க., வை சேர்ந்தவர் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சேர்மன் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அ.தி.மு.க., சார்பில் சேர்மன் பதவிக்கான பெண் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட பொருளாளர் காசிராஜனின் மனைவி குழித்துறையை சேர்ந்த மல்லிகா அ.தி.மு.க., சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குழித்துறை பஸ் ஸ்டாண்ட், நகராட்சிக்குட்பட்ட ரோடுகள் அகலப்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதிகளுடன் களம் இறங்கியுள்ள இவர் முக்கியமானவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.மா.கம்யூ., சார்பில் முன்னாள் சேர்மன் டெல்பின் களம் இறக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. தி.மு.க., சார்பில் தற்போதைய சேர்மன் பொன்.ஆசைதம்பியின் அண்ணன் மகள் பாகினி மட்டும் கட்சி சார்பில் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனால் இவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காங்., சார்பில் பலர் சீட் கேட்டாலும் நகர பொது செயலாளர் ஆனந்தலால் மனைவியும், தனியார் பள்ளி முதல்வருமான ஹேமலால் போட்டியிட வேண்டும் என்று காங்., நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர் போட்டியிட்டால் நகராட்சியை கைப்பற்றலாம் என்று காங்., நிர்வாகிகள் கருதுகின்றனர். இதை போல் பா.ஜ., சார்பிலும் வேட்பாளர் நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மா.கம்யூ., சிற்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்துவதற்கும் மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதை போல் 21 வார்டுகளிலும் சீட் பெறுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் குழித்துறை நகராட்சியை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24-Sep-2025 | 1