போலி பணி நியமன ஆணை இருவர் மீது போலீஸ் வழக்கு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி ரூ.13 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்தவர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பாரதிநகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி 48. இவர் போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியதாவது: டிராவல்ஸ் ஏஜன்சி நடத்தும் ரூபேஷ் இஸ்ரேல் தாமஸ் 30, என் கணவர் வேல்முருகன் மூலம் பழக்கமானார். அவர் என் மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி ரூ.12 லட்சத்து 85 ஆயிரத்தை அவரிடம் வழங்கினேன். தொடர்ந்து ரூபேஸ் இஸ்ரேல் தாமஸ் ஏற்பாட்டின் பேரில் சென்னையைச் சேர்ந்த விஜய விநாயகமூர்த்தி 50, என்பவர் வேலைக்கான ஆணையை வழங்கினார். ஆனால் அது போலியானது என தெரிய வந்தது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து இருவர் மீதும் தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.