உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மன்னர் உடைவாள் மாற்றும் சடங்குடன் நவராத்திரி பவனி கேரளா புறப்பட்டது

மன்னர் உடைவாள் மாற்றும் சடங்குடன் நவராத்திரி பவனி கேரளா புறப்பட்டது

நாகர்கோவில்:திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து சுவாமி விக்ரகங்களின் பவனி நேற்று காலை புறப்பட்டது. இதையொட்டி மன்னரின் உடைவாளை கைமாற்றும் பாரம்பரிய சடங்கு அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடந்தது. திருவிதாங்கூர் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின் பத்மனாபபுரத்தில் நடந்த நவராத்திரி விழா அங்கு நடந்தது. இதற்காக மன்னர் உத்தரவுப்படி பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்படும். மன்னராட்சி மறைந்த பிறகும் இரு மாநிலங்களை இணைக்கும் விழாவாக நடந்து வருகிறது. செப்., 23 நவராத்திரி பூஜை துவங்கும் நிலையில் நேற்று காலை பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. யானை மீது சரஸ்வதி அம்மனும் பல்லக்குகளில் முருகன், முன்னுதித்த நங்கை விக்கிரகங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. பத்மனாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் இருந்து சரஸ்வதி தேவி விக்ரகம் எடுத்து வரப்பட்டு யானை மீது ஏற்றப்பட்ட போது கேரள மற்றும் தமிழக போலீசார் துப்பாக்கியை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரண்மனை முன் வாசலில் முறைப்படியான வரவேற்பு கொடுத்த பின் பவனி புறப்பட்டது. முன்னதாக பத்மனாபபுரம் அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடந்த சடங்கில் மன்னர் பயன்படுத்திய உடைவாளை கேரள தொல்லியல் அமைச்சர் ராமச்சந்திரன் எடுத்து குமரி மாவட்ட தேவசம்போடு துணை ஆணையர் ஜான்சி ராணியிடம் ஒப்படைத்தார். இந்த வாள் ஊர்வலத்தின் முன்னாள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகு மீனா, எஸ்.பி., ஸ்டாலின், விஜய் வசந்த் எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று குழித்துறையில் தங்கிய இந்த பவனி, இன்று நெய்யாற்றின் கரையில் தங்கி, நாளை மாலை திருவனந்தபுரம் சென்றடையும். அப்போது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் பவனியை முறைப்படி வரவேற்று அழைத்து செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை