குளத்தில் மாணவன் பலி தத்தளித்த இருவர் தப்பினர்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மாலைக்கோடு, காமக்குளம் பகுதியை சேர்ந்த பிரைட் மகன் பிரினித், 19. இரண்டாவது மகன் பிரதீப், 16. பிரினித் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்தார். இவர்களது வீட்டின் அருகே சிறிய குளம் உள்ளது.தற்போது குளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. குளிப்பதற்காக பிரினித், பிரதீப் மற்றும் உறவினர் மகன் ரனாய், 16, ஆகியோர் சென்றனர். மூவரும் ஒருவர் பின் ஒருவராக குளத்தின் ஆழமான பகுதியில் டைவ் அடித்தனர். அந்த பகுதியில் சகதி அதிகளவில் இருந்ததால், மூவரும் சிக்கி உயிருக்குப் போராடினர். இவர்களது சத்தம் கேட்டு பக்கத்தில் வசிக்கும் ரத்தினதாஸ் ஓடிச்சென்று, தென்னை ஓலையை துாக்கி குளத்துக்குள் வீசி, பிரதீப், ரனாய் இருவரையும் இழுத்து கரைக்கு கொண்டு வந்தார். அதற்குள் குளத்துக்குள் மூழ்கிய பிரினித் இறந்தார். அருமனை போலீசார் விசாரிக்கின்றனர்.