உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவல் போட்டிக்கு தொடரும் தடை களை இழந்த அரவக்குறிச்சி கிராமம்

சேவல் போட்டிக்கு தொடரும் தடை களை இழந்த அரவக்குறிச்சி கிராமம்

கரூர், :பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கும் சேவல் போட்டிக்கு, போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால், அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகள் களை இழந்து காணப்படுகிறது.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு, கோவிலுார், மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளில், பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்களுக்கு சேவல் போட்டி நடப்பது வழக்கம். அரவக்குறிச்சியில் நடக்கும் சேவல் போட்டிக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் சேவல்களை போட்டிக்கு கொண்டு வருவர். இதனால் அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வியாபாரம் களை கட்டி இருக்கும்.இந்நிலையில் கடந்த, 2014ல், பொங்கல் பண்டிகையின் போது நடந்த சேவல் போட்டியின் போது, சேவல் கால்களில் கட்டப்பட்டிருந்த கத்தி பாய்ந்து இரண்டு பேர் இறந்தனர். இதனால், கரூர் மாவட்டத்தில், பொங்கல் விழாவின் போது சேவல் போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளாக தடை விதித்து வருகிறது. நடப்பாண்டு, சேவல் போட்டிகளை நடத்த ஏற்பாட்டாளர்கள் முயற்சி செய்து வந்தனர். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் சேவல் போட்டி நடக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால், கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, சேவல் போட்டிகளை நடத்த தடை விதித்து உத்தரவிட்டார்.இதனால், நேற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, சேவல் போட்டி நடக்காததால் அரவக்குறிச்சி அருகே பூலாம் வலசு, கோவிலுார் மற்றும் மணல் மேடு உள்ளிட்ட கிராம பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ