வெற்றிலையில் கருவங்கு நோய் தாக்கம்தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
வெற்றிலையில் 'கருவங்கு' நோய் தாக்கம்தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. மழை, பனிப்பொழிவு, அதிக வெப்பம் என, மாறி, மாறி நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக, வெற்றிலையில் செவ்வட்டை மற்றும் கருவங்கு நோய் தாக்குதல் பரவி வருகிறது. இதனால், வெற்றிலை பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக, நமது நாளிதழில், கடந்த, 17ல் செய்தி வெளியானது.இதையடுத்து, நேற்று காலை கரூர், கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர் குழுவினர், கிருஷ்ணராயபுரம் பகுதியில் வயலாய்வில் ஈடுபட்டனர். பின், கருவங்கு, செவ்வட்டை நோய் தாக்குதலில் பாதிப்படைந்த வெற்றிலை செடிகளில் பரவிய செதில் பூச்சிகளை கட்டுப்படுத்த, குளோரிபைரிபாஸ் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மீன் அமில எண்ணெய் சோப்பை, ஒரு லிட்டருக்கு, 3 மி.லி., என்ற அளவில் ஒட்டும் பசையுடன் தெளித்து கட்டுப்படுத்தலாம் என, விளக்கினர்.ஆய்வில், வேளாண்மை அறிவியல் நிலை பூச்சியல் தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீதர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.