ரத்தினகிரீஸ்வரர் கோவில் தொழிலாளர்கள் ஆலோசனை
ரத்தினகிரீஸ்வரர் கோவில் தொழிலாளர்கள் ஆலோசனைகுளித்தலை,:குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 30 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை கோவில் வளாகத்தில், தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் துரை தலைமையில் நடந்தது.இதில், 13 தொழிலாளர்கள், 2021ம் ஆண்டில் அரசு பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு சம்பளம், 18 ஆயிரம் ரூபாய். தொழிலாளர் நல வைப்பு நிதி பிடித்தம் போக, 6,000 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தரமற்ற, 17 தொழிலாளர்களுக்கும் இதேபோல் வழங்கப்பட்டு வருகிறது.இக்கூட்டத்தில் அரசு ஊழியராக அறிவிக்கப்பட்ட, 13 தொழிலாளர்களுக்கு அரசு சம்பளத்தை வழங்க வேண்டும்; மற்ற 17 தொழிலாளர்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். இதன் மீது உரிய நடவடிக்கையை, அரசு எடுக்காத பட்சத்தில் கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்தனர்.பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, கோரிக்கை மனுவாக செயல் அலுவலர் தங்கராஜிடம் வழங்கினர். அப்போது கோயில் செயல் அலுவலர், 'கோவிலுக்கு வரக்கூடிய வருவாய்களை அனைத்து தொழிலாளர்களும், வசூல் செய்தால் உங்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்' என்றார்.இதையடுத்து அவர்கள் சென்றனர்.