2,000 ஏக்கர் பாசன வசதிக்குகால்வாய் துார்வாரும் பணி
2,000 ஏக்கர் பாசன வசதிக்குகால்வாய் துார்வாரும் பணிகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து வரும் நீரால் பாரூர் ஏரி நிரம்பியதும், அங்கிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக, போச்சம்பள்ளி கோணணுார், திப்பனுார் ஏரிகளின் வழியாக, மத்துார் அருகே, 540 ஏக்கர் பரப்பளவுள்ள பெணுகொண்டாபுரம் ஏரிக்கு வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான, 21 அடியில், 140 மில்லியன் கன அடி நீர் தேக்கப்படுகிறது. இங்கிருந்து ஒட்டப்பட்டி, கொடமாண்டப்பட்டி, கவுண்டனுார், அந்தேரிப்பட்டி, ரங்கம்பட்டி உள்ளிட்ட பஞ்.,களில், 2,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. தற்போது பெய்த கனமழையால், ஏரி நிரம்பி உள்ளது. ஏரி பாசன கால்வாய் புதர் மண்டி கிடப்பதால், அதை துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். மில்கி மிஸ்ட் பால் நிறுவனம், காவிரி கடைமடை பகுதி ஒருங்கிணைப்பு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் பெணுகொண்டாபுரம் பாசன விவசாயிகள் பங்களிப்புடன், கால்வாய் துார்வாரும் பணி நேற்று துவங்கியது. போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா தலைமை வகித்தார். ஊத்தங்கரை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் ஜெய்குமார், மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சவுந்திரராஜன், மில்கி மிஸ்ட் மேலாளர் வஜ்ஜிரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.