கரூர்: கரூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, வாகனங்களை சரியாக நிறுத்தும் வகையில், பெயின்ட் மூலம் கோடுகள் புதிதாக வரைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் நகரில் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஜவஹர் பஜார், கோவை, தின்னப்பா கார்னர் சாலை மற்றும் லைட்ஹவுஸ் கார்னர் சாலை களில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இதனால், அந்த சாலைகளில் கார், டூவீலர், வேன் உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள், நீண்ட நேரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் கரூர் நகரப்பகுதிகளில், நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதை தவிர்க்கும் வகையில், கரூர் நகரப்பகுதிகளில் கார் உள்ளிட்ட வாகனங்களை, ஒரு குறிப்பிட்ட எல்லை பகுதிகளில் நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில், சில மாதங்களுக்கு முன், சாலைகளில் பெயின்ட் மூலம் கோடுகள் போடப்பட்டன. தற்போது, அந்த கோடுகள் அழிந்து விட்டன. மக்கள் கார், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை, தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். கரூர் நகரப்பகுதிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர் நகரப்பகுதிகளில் முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், புதிதாக வெள்ளை கோடு வரைந்து, வாகனங்களை முறையாக நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.