| ADDED : ஜூலை 12, 2024 01:18 AM
கிருஷ்ணராயபுரம், ஜூலை 12-மாணிக்கபுரம் பகுதியில் காற்றலை இயந்திரங்கள் ஏற்றி வந்த லாரிகளை, கிராம மக்கள் சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், சேங்கல் பஞ்சாயத்து மாணிக்கபுரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட காற்றாலை அமைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பல கிராமங்களில், புதிதாக காற்றலை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகளில், தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.காற்றலை அமைப்பதால் சேங்கல் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு, மழை குறைவு, வறட்சி ஆகிய காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, அய்யம்பாளைம் பகுதியில் இருந்து மாணிக்கபுரம் வழியாக புதிதாக காற்றாலை இயந்திரங்கள் ஏற்றி வந்த ஐந்துக்கு மேற்பட்ட லாரிகளை, அந்த பகுதி மக்கள் மறித்து சிறை பிடித்தனர். இதனால் லாரிகள் நின்றதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது.இது குறித்து மாணிக்கபுரம் மக்கள் கூறுகையில், 'மாணிக்கபுரம் பகுதியில் புதிதாக காற்றாலை அமைப்பதால் விவசாயம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லாரிகள் இந்த வழியாக வரும் போது மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பகுதியில் லாரிகள் வராமல் இருக்க, பல கோரிக்கைகள் வைக்கப்பட்டும் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராமங்களில் காற்றாலை அமைக்க கூடாது,' என்றனர்.