கரூர்: டூவீலரை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்த முகவர், புகார்தாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கும்பகோணம், இளந்துரை பகுதியை சேர்ந்தவர் உத்தமன், 45; இவர் கடந்த, 2020ல் கும்பகோணத்தில் அரசு பாலாஜி, 48, என்ற விற்பனை முகவரிடம், 64 ஆயிரத்து, 875 ரூபாய் செலுத்தி பஜாஜ் பிளாட்டினா-100 பி.எஸ்-4 என்ற டூவீலரை விலைக்கு வாங்கியுள்ளார்.பிறகு, அந்த வாகனத்தை இந்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை விற்பனை செய்ய தடை விதித்திருந்தது தெரியவந்தது.இதனால், டூவீலரை பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பி தருமாறு உத்தமன், முகவர் அரசு பாலாஜியிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து, உத்தமன் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடந்தார். பிறகு, அந்த வழக்கு கடந்த ஜன., 30ல் கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.நேற்று வழக்கை விசாரித்த, கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் பாரி, உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர், டூவீலரை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்த முகவர் அரசு பாலாஜி, இரண்டு லட்சத்து, 74 ஆயிரத்து, 875 ரூபாயை, அதற்குரிய வட்டியுடன், ஒரு மாதத்துக்குள், புகார்தாரர் உத்தமனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.