உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி வழியாக ரயில் பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி வழியாக ரயில் பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வழியாக, புதிய ரயில் பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையகோட்டை, ஈசனத்தம், சின்னதாராபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், பல்வேறு மாநிலங்களில் தொழில் செய்வதால் அடிக்கடி பயணம் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், ரயில் போக்குவரத்தை நம்பியே இருப்பதால், கரூர், திண்டுக்கல், ஈரோடு நகரங்களுக்கு சென்று ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

லட்சக்கணக்கானோர் பயனடைவர்

அரவக்குறிச்சியில் இருந்து, 35 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள ஒட்டன்சத்திரத்தில் ரயில் வசதி உள்ளது. எனவே, பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக கரூருக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டால், இப்பகுதி மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். 70 கி.மீ., துாரம் கொண்ட புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டால் ஒட்டன்சத்திரம், வேடசந்துார், அரவக்குறிச்சி, கரூர் பகுதிகளில் உள்ள, லட்சக்கணக்கான மக்கள் பயனடைவர்.

கட்டணம் குறைவாக வரும்

பாலக்காட்டில் இருந்து சென்னை செல்ல கோவை, ஈரோடு, சேலம் வழியாக சென்னை. அடுத்து பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக ஈரோடு, கரூர், திருச்சி, சென்னை. மூன்றாவதாக பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக திண்டுக்கல், திருச்சி, சென்னை என்ற மூன்று வழித்தடங்கள் உள்ளன. இவை அனைத்தும் மிக தொலைவிலான வழிப்பாதைகள். எனவே, பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, கரூர், திருச்சி, சென்னை செல்லும் வகையில் புதிய ரயில்வே வழித்தடம் அமைந்தால், மற்ற மூன்று வழித்தடங்களை காட்டிலும் துாரம் குறைவானதாகவும், பயணிகளின் பயண நேரம், கட்டணம் குறைவானதாகவும் அமையும்.

ரயில் போக்குவரத்து அவசியம்

மேலும், பழனிக்கு கரூர் மாவட்ட பகுதியில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். கரூரில் தயாராகும் ஜவுளி பொருட்கள், கப்பல் மூலமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. கரூரில் இருந்து, 75 சதவீதம் கேரளத்தில் உள்ள கொச்சின் துறைமுகத்திற்கும், 25 சதவீதம் சென்னை துறைமுகத்திற்கும் அனுப்பப்படுகிறது. எனவே, கரூரில் இருந்து கொச்சின் துறைமுகத்திற்கு சரக்கு அனுப்ப, ரயில் போக்குவரத்து பயனுள்ளதாக அமையும்.

ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும்

ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் புகழ் பெற்றது. இந்த வழித்தடம் அமைந்தால், காய்கறிகள், விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். ரயில்வே துறைக்கு இந்த வழித்தடம் நல்ல வருவாயை ஏற்படுத்தி தரும். எனவே மக்கள் நலன் கருதி, பழனியில் இருந்து கரூர் வரை ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக புதிய ரயில்வே வழித்தடம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி