உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் ரூ.2,976.22 கோடிக்கு கடன் வழங்கல் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர் மாவட்டத்தில் ரூ.2,976.22 கோடிக்கு கடன் வழங்கல் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர், நவ. 17-''கூட்டுறவு துறை மூலம், 2,976.22 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.கரூரில், 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பயனாளிகளுக்கு, 37.01 கோடி மதிப்பிலான அரசு நல திட்ட உதவி வழங்கி பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டுறவு துறை சார்பில், பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன் மத்திய கால கடன் என, மொத்தம் 3.65 லட்சம் பயனாளிகளுக்கு, 2,976.22 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 84 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 9 சங்கங்கள், 6 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கி உள்ளது.தென்னிலை, மகாதானபுரத்தில் இரண்டு மகளிர் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. க.பரமத்தி, அரவக்குறிச்சி போன்ற வறட்சி மிகுந்த பகுதிகளில் வட்டியில்லா கடனை, பயிர்கடனோடு இணைந்து, 191 கோடி ரூபாய் கூட்டுறவுத்துறை மூலமாக வழங்கி, மாநிலத்தில் முதலாவதாக உள்ளோம்.கடந்த, 28 ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்த கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும். கணினிமயமாக்குதல் பணியில் மாநிலத்திலேயே கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலமாகவும், முல்லை என்ற வர்த்தக பெயரில் ராகி மாவு, கோதுமை மாவு, எண்ணெய் வகைகள், வேப்பம்புண்ணாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும் வழங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனராஜ், அன்பரசன், ராஜா. சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை