| ADDED : மே 03, 2024 07:17 AM
கரூர் : கரூரில், 47 ஆண்டுகள் இல்லாத அளவு வெயில், 44.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருப்பதால் மக்கள் தவித்து வருகின்றனர்.தமிழகத்தின் மைய பகுதியாக விளங்கும் கரூர், தொழில் நகரமாகும். இங்கே காவிரி ஓடினாலும், செழுமையான விவசாயம் நடப்பதில்லை. இந்த மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. சுண்ணாம்பு மண் நிறைந்த மாவட்டம் என்பதால், இயற்கையாகவே இங்கு மானாவாரி நிலங்கள் அதிகம். இங்கு பல தொழிற்சாலைகள் உள்ளன. அதனாலும் இங்கு வெப்பம் அதிகம். குறைந்தபட்சம், 38 செல்சியஸ் வெயில் வாட்டி எடுக்கிறது.குறிப்பாக க.பரமத்தி பகுதியில்தான் அதிக வெப்பம் பதிவாகிறது. கரூர் பரமத்தியில் கடந்த, 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 44 செல்சியஸ் (111.2 டிகிரி) வெயில் நேற்று பதிவாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதனால் மக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். அதீத வெயிலால் பலருக்கும் மயக்கம் ஏற்படுகிறது. தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட ஆரம்பித்துள்ளன.இதுபற்றி இயற்றை ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக ஒரு நிலப்பரப்பில், 33 சதவீத மரங்கள், காடுகள் இருந்தால்தான் அந்தப் பகுதி செழிப்பாக இருக்கும். வெப்பம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளைத் தாங்கும் தன்மையோடு அந்தப் பகுதி இருக்கும். கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும், 4 சதவீதம்தான் மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. அதிலும், கடவூர் ஒன்றியத்தில் 2 சதவீத அளவிலேயே மரங்கள் இருக்கின்றன. மீதமுள்ள 2 சதவீத மரங்கள்தான் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ளது. இதனால்தான், இங்கே வெப்பம் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி உள்ளது.இவ்வாறு கூறினர்.