அடிதடி, ஆள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது பா.ம.க., நிர்வாகி உட்பட இருவருக்கு வலை
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரியில் அடிதடி, ஆள்கடத்தலில் ஈடுபட்ட, 5 பேரை போலீசார் கைது செய்து, பா.ம.க., நகர செயலாளர் மற்றும் த.வா.க., நிர்வாகியை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோட்டை சேர்ந்தவர் அகில், 26, த.வா.க., நிர்வாகி. தம்மண்ண நகரை சேர்ந்தவர் நித்திஷ்குமார், 27. கிருஷ்ணகிரி, பா.ம.க., நகர செயலாளர். இவர்கள், தங்கள் நண்பரான பிரபுபிரசாந்த் என்பவருடன், சேலம் சாலையிலுள்ள ஒரு ஓட்டலுக்கு கடந்த, 23ல் சென்றனர். அங்கு பாரதியார் நகரை சேர்ந்த சஞ்சய், 22 என்பவர் இருந்துள்ளார். இவர்களுக்குள் ஏற்கனவே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் அங்கு மீண்டும் ஏற்பட்ட தகராறில், நித்திஷ்குமார் தரப்பினர், சஞ்சயை டூவீலரில் கடத்திச்சென்று, அவரை, கிருஷ்ணகிரி என்.எஸ்.கே., லேண்ட் மார்க் அருகே, சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து தாக்கினர். அங்கிருந்து தப்பிய சஞ்சய், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அவர் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நித்திஷ்குமார் தரப்பை சேர்ந்த, கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் மஞ்சுநாத், 29, ராஜிவ்காந்தி நகர் கார்த்திக், 26, பிரபு பிரசாந்த், 28, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கவின், 26, ஆகிய, 4 பேரை கைது செய்தனர். இதே வழக்கில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ஓசூரை சேர்ந்த கிரீன்பேட்ரிக்,31, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான கிருஷ்ணகிரி, பா.ம.க., நகர செயலாளர் நித்திஷ்குமார், த.வா.க., நிர்வாகி அகில் ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் மீது அடிதடி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.கடந்த சில தினங்களுக்கு முன், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட, தி.மு.க.,வினர், 3 பேர் கைதான நிலையில், தற்போது ஆள் கடத்தல் வழக்கில், பா.ம.க., - த.வா.க., கட்சி நிர்வாகிகளை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.