கரூர்:கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.க.பரமத்தி
ஊராட்சி ஒன்றியத்தில், 30 பஞ்சாயத்துகள் உள்ளன. அதில், 400க்கும்
மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. க.பரமத்தியில் அரசு அலுவலகங்கள்,
ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக
நிறுவனங்கள், கிரஷர் தொழில், கல் குவாரி உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள்
உள்ளன. இப்பகுதியில் கட்டுமான பணிகளும் அதிகரித்து கொண்டே
செல்கிறது. க.பரமத்தி வழியாக, கரூர் கோவை சாலையில் ஏராளமான
வாகனங்கள் செல்கின்றன.க.பரமத்தியில் எதிர்பாராதவிதமாக
தீ விபத்து ஏற்பட்டாலோ, விபத்து நடந்தாலோ கரூர், அரவக்குறிச்சி
அல்லது வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தான் தீயணைப்பு
வாகனங்கள் வர வேண்டியுள்ளது. இதில் கரூர் தீயணைப்பு நிலையம், 18
கி.மீ., தொலைவிலும், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையம், 28 கி.மீ.,
தொலைவிலும், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையம், 20 கி.மீ.,
தொலைவிலும் உள்ளது.தொலை துாரத்தில் இருந்து தீயணைப்பு
வாகனங்கள் வருவதற்குள், தீ விபத்து பரவி பலத்த சேதம் ஏற்பட்டு
விடுகிறது. கடந்த ஆண்டுகளில் காருடையாம் பாளையம் அருகே தனியார் பஞ்சு
மில் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது. இதேபோல பல தீ விபத்து
சம்பவங்களும், இப்பகுதியில் அடிக்கடி நடக்கின்றன. எனவே,
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்
கோரிக்கை வைத்துள்ளனர்.