பொது கழிப்பறையில் கட்டணம் வசூல்; கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
கரூர்: கரூர் மாநகராட்சியின் பொது கழிப்பறைகளில் கட்டண வசூல் செய்வதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.கரூர் மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட், முக்கியமான பஸ் நிறுத்தங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கட்டண கழிப்பறை, இலவச கழிப்பறைகள் உள்ளன. ஒப்பந்ததாரர் பராமரிப்பில் உள்ள கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க, 5 ரூபாய், மலம் கழிக்க, 10 ரூபாய் வசூலிக்க வேண்டும்.உழவர் சந்தை, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திருவள்ளுவர் மைதானம், கரூர் மக்கள் பாதை, பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் கட்டணமில்லா பொது கழிப்பறைகள் உள்ளன. இவை துாய்மை பாரதம் திட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டன. இங்கும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சிறுநீர், மலம் கழிக்க, 5 முதல் 10 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.நாளொன்றுக்கு, 500 முதல், 2,000 ரூபாய் வரை, ஒவ்வொரு கழிப்பறையில் இருந்தும் வசூலாகிறது. இதற்காக, 'இலவச கழிப்பறை' என எழுதாமல், பொது கழிப்பறை என, அறிவிப்பு பலகை வைத்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் முறைகேடாக வசூலிக்கப்படுகிறது.மாநகராட்சி மேயர் கவிதா கூறுகையில்,'' பொது கழிப்பறைகளில் கட்டணம் வசூல் செய்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார் தெரிவித்தால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை,'' என்றார்.