கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., மறியல் போராட்டம்
நாமக்கல்: சி.ஐ.டி.யு., சார்பில், வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம், தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். எலச்சிப்பாளையம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், ஐ.சி.டி.எஸ்., மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் செங்கோடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஓ.எச்.டி., இயக்குனர்கள், துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், டி.பி.சி., பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த உள்ளாட்சி தொழிலாளர்கள் அனைவரையும், அரசாணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம பஞ்.,களில் காலியாக உள்ள துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., இயக்குனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, ஆண், பெண் என, 117 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.