திடீரென நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி டிரைவர் உயிரிழப்பு
குளித்தலை, திடீரென லாரியை நிறுத்தியதால், பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த சுரட்டாபாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 28. இவரது கணவர் சந்திரகாந்த், 30, லாரி டிரைவர். இவர் கடந்த 16 மதியம் 2:00 மணியளவில் கோவையிலிருந்து பெரம்பலுார் நோக்கி திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி, எந்தவித செய்கையும் காட்டாமல், திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த லாரி மோதியது.இந்த விபத்தில் டிரைவர் சந்திரகாந்துக்கு வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த, 18ம் தேதி உயிரிழந்தார்.திடீரென லாரியை நிறுத்தி விபத்தை ஏற்படுத்திய, லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் நடுத்தெருவை சேர்ந்த வினோத், 25, மீது மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.