செயற்கையாக மாம்பழம் பழுக்க வைப்புஉணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை தேவை
கரூர்,:செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள், கரூரில் விற்பனை செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, உணவுபாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் மாநகராட்சி பகுதிகளில், மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்கள் கரூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கரூரில் வாங்கல் சாலை, கோவை சாலை, உழவர் சந்தை, காந்திகிராமம், தான்தோன்றிமலை, வெங்கமேடு பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.அல்போன்சா, ருமானி, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மாம்பழ சீசன் களை கட்டிய நிலையில், சில வியாபாரிகள் செய்யும் தில்லுமுல்லுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. கடந்த காலங்களில் மாம்பழம் சாப்பிட்டால், நாக்கு தித்திக்கும். தற்போது வரும் மாம்பழங்களை உண்டால், நாக்கு புண்ணாகிறது. வெளித்தோற்றத்தில் பழத்தின் சாயல் இருக்கும், சுவைத்தால் சுண்ணாம்பு ருசி. மாங்காய்களை பழுக்க வைக்க, பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இது போன்ற பழங்களை வாங்கி உண்பதால், உடல் நலத்துக்கு பாதிப்பு உண்டாகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாம்பழ சீசனின் போது அதிகாரிகள், 'ரெய்டு' நடத்தி செயற்கை முறை பழங்களை அழிக்கின்றனர். இருந்தும், முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர், செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.