வாழைத்தார் வரத்து அதிகரிப்பு எதிர்பார்த்த விலை இல்லை
கரூர், அக். 5-தொடர் மழை காரணமாக, வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், மகாளய அமாவாசையொட்டி விலை எதிர்பார்த்த அளவில் உயரவில்லை.கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயுதம்பாளையம், புகளூர், வாங்கல், திருமூக்கூடலுார், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழைத்தார் சாகுபடி நடக்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை தவிர, அமராவதி அணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆறுகளில் வந்த தண்ணீரும் காவிரியாற்றில் கலந்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வாழைத்தார் சாகுபடி அதிகரித்துள்ளது.இந்நிலையில் கடந்த, 2 ல் மகாளய அமாவாசை அனுசரிக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, வாழைத்தார்கள் மார்க்கெட்டுக்கு வந்தது. கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன், 600 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற கற்பூரவள்ளி, 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற பச்சை நாடான், 400 ரூபாய்க்கும் நேற்று ஏலம் போனது.இதுகுறித்து, வாழைத்தார் வியாபாரிகள் கூறியதாவது: கடந்தாண்டை விட, நடப்பாண்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு, மாநிலம் முழுவதும் பெய்த மழை தான் காரணம். வரத்து அதிகரிப்பால், விலை எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. கடந்தாண்டு பூவன் தார், 600 ரூபாய் முதல், 900 ரூபாய் வரை விலை போனது. நடப்பாண்டு அதிகபட்சமாக, 600 ரூபாய்க்கு தான் விலை போனது. வரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி காலங்களில், வாழைக்கு விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.