உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

கரூர், டிச. 4-'கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் எச்சரித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி முழு வீச்சில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. யூரியா - 1,675 மெ.டன்; டி.ஏ.பி.,-324 மெ.டன்; பொட்டாஷ், -1.327 மெ.டன்; காம்ப்ளக்ஸ் உரங்கள், -1.354 மெ.டன்; சூப்பர் பாஸ்பேட்,- 448 மெ. டன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தனியார் உர விற்பனையாளர்கள் அனைவரும் உர விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விற்பனை உர உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையினை கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள்தோறும் பராமரிக்க வேண்டும். உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். உரம் குறித்த புகார்களுக்கு தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட அளவிலான குழுக்கள் உர விற்பனை நிலையங்களை திடீர் ஆய்வின்போது, கூடுதல் விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரம் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ