கரூர்: கரூரில் நடந்த, அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து இறுதி போட்டியில், கேரளா மின் வாரிய அணி வெற்றி பெற்றது.கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் கடந்த, 9 ல் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் இரவு இறுதி போட்டி நடந்தது. அதில், கேரளா மின் வாரிய அணியும், கிழக்கு ரயில்வே அணியும் மோதின. அதில், கேரளா மின் வாரிய அணி, 86-59 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாமிடத்தை சதர்ன் ரயில்வே அணியும், நான்காம் இடத்தை சென்னை ரைசிங் ஸ்டார் அணியும் பிடித்தது.முதலிடம் பிடித்த கேரளா மின் வாரிய அணிக்கு பரிசாக, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். இரண்டாமிடம் பெற்ற அணிக்கு, 40 ஆயிரம் ரூபாய், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு, 30 ஆயிரம் ரூபாய், நான்காமிடம் பிடித்த அணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், எம்.பி., ஜோதிமணி, கூடைப் பந்து கழக சேர்மன் தனபதி, மாவட்ட தலைவர் கார்த்தி, துணைத்தலைவர்கள் முருகன், குழந்தைவேல், செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.