கடும் பனிப்பொழிவால் எலுமிச்சைக்கு விலை இல்லை: விவசாயிகள் கவலை
கரூர்: தொடரும் பனிப்பொழிவால், எலுமிச்சை பழத்துக்கு விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை விளைச்சல் அதிகளவில் இல்லை. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம்பாளையம் பட்டி, வீரன்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் பீஜப்பூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, கரூர் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ஒரு கிலோ எலுமிச்சை, 80 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் முதல் பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ எலுமிச்சை, 40 முதல், 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கடந்த, இரண்டு மாதங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. காய்ச்சல், சளி, வறட்டு இருமல் காரணமாக, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சையின் தேவை குறைந்து விட்டது. இதனால், விலையும் கணிசமாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை நிறைவு பெற்றுள்ளது. கோடைகாலம் துவங்கும் நிலையில், எலுமிச்சைக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, அதன் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.