திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர்: கரூர் மாநகராட்சி, பழைய கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படும் போது, அதை சரி செய்ய வசதியாக, வட்ட வடிவில் மேல் பகுதிகளில், துவாரம் விடப்பட்டு சிமென்ட் அல்லது இரும்பு மூடிகள் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், மாநகராட்சியில் பல முக்கிய சாலைகளில், பாதாள சாக்கடை மேல் பகுதியில் போடப்பட்டுள்ள மூடிகள் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் மூடிகள் திறந்து கிடக்கிறது. இதில், கரூர் தெற்கு காந்திகிராமம் வீட்டு வாரிய பூங்கா சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் சேதமடைகிறது. இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். உடனடியாக மூடியை மூட வேண்டும், சேதமான மூடிகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.